வேளாண் பல்கலையில் "பசுமை புரட்சியில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு" குறித்து சிறப்புக் கருத்தரங்கம் நாளை துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை என்றும் பசுமை புரட்சியில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தேசிய அளவிலான கருத்தரங்கு அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கான நிதி உதவியை கனடா அரசாங்கமும், பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து வழங்குகின்றது. இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தியை பெருக்குவதும், அறுவடைக்குபின் ஏற்பட கூடிய மகசூல் இழப்பை குறைப்பதற்கான வழிவகை செய்வதாகும்.

நானோ தொழில்நுட்பம் என்பது மிகச்சிறு துகள் பற்றிய ஆய்வு. இந்த துகள்களின் அளவு நூறு கோடியில் ஒரு பகுதி மீட்டர் ஆகும். இவ்வாறு அளவு குறையும் போது அந்த பொருளின் பரப்பளவு பல ஆயிரம் மடங்கு அதிகமாகின்றது. உதாரணமாக, ஒரு கிராம் களிமண் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு நிரப்ப முடியும். அதே ஒரு கிராம் களிமண்ணை நானோ அளவிற்கு குறைக்கும் பொழுது அதனுடைய பரப்பளவு ஒரு ஆயிரம் சதுர மீட்டராக அதிகமாகிறது.

ஆகவே இந்த தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படக்கூடிய வேளாண் இடுபொருட்களின் உபயோகிக்கும் தன்மை அதிகரிப்பதுடன், வீணாவதையும் தடுக்கலாம். அதனால் மண் மற்றும் நீர் மாசுப்படுதல் குறையும்.

இந்தியாவில் உள்ள 76 வேளாண் பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தான் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் வேளாண்மை என்ற ஆய்வு, கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த துறைக்கு தேவையான நிதி கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக கனடா அரசாங்கமும், ஐடிஆர்சி- யும் இணைந்து ரூபாய் 12 கோடி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்த துறையில் பழங்களை கெடாமல் பாதுகாக்க ஹெக்சனால் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, அறுவடைக்குப் பின் ஏற்படக்கூடிய இழப்பு 10-12 சதவீதம் குறைந்ததாக மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தில் கண்டறியப்பட்டது. மேலும் நானோ தொழில்நுட்பம் மூலம், நானோ ஸ்டிக்கர் மற்றும் நானோ ஷாசே என்ற எளிய முறை உருவாக்கப்பட்டு, பழங்களை ஓரிரு வாரங்களுக்கு பாதுகாக்க முடியும்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி தொடங்கி வைத்து முதன்மை உரை ஆற்றவுள்ளார். இந்த கருத்தரங்கில் ஐடிஆர்சி-யின் இணை இயக்குநர் அனிந்தியா சட்டர்ஜி துவக்க உரையாற்ற இருக்கிறார்.

இந்த விழாவின் சிறப்பு உரையாற்ற கல்ப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜெயசங்கர் சுப்ரமணியன், கனடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். ஜவஹர் (இயற்கை மேலாண்மை சிறப்பு அலுவலர்) மற்றும் சன் அக்ரோ பையோடெக்னின் இயக்குநர் சித்தானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இதில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter